கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்! பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகரம்!!

    -MMH 

  கோவை நரசிபுரம் அருகே மின்வேலியை கடக்க முடியாமல் யானைக்கூட்டம் சிரமப்பட்டதை கண்டு பரிதவித்த கிராம மக்கள், பின்னர் யானைக்கூட்டம் மின்வேலியை கடந்து சென்றதால் நிம்மதியடைந்தனர்.

கோடைக்காலம் துவங்கியதை அடுத்து, கோவை மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் தேவராயபுரம் பகுதியில் நேற்று கூட்டியுடன் யானைக்கூட்டம் ஒன்று தனியார் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது, அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை கடக்க முடியாமல் யானைக்கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று சிரமப்பட்டது.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ''அய்யோ பச்சபுள்ள.. சாமி பார்த்து போங்க.. சாமி... அவ்வளவு தான் பத்திரமா புள்ளைய கூட்டிட்டு போயிருங்க சாமி''... என்று கோவை வட்டார வழக்கில் கூறினர். அப்போது, பெரிய யானை ஒன்று சமயோஜிதமாக செயல்பட்டு மின்வேலியை தரையுடன் அழுத்தி பிடிக்கவே, அந்த குட்டியானை மின்வேலியை கடந்தது. இதனை தொடர்ந்து, மற்ற யானைகள் தோட்டத்தை கடந்து சாலையில் நடந்து சென்றன.

குட்டியுடன் வந்த யானைக்கூட்டம் பத்திரமாக மின்வேலியை கடந்து செல்வதை செல்வதை கண்ட அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே, மின்வேலியை கடக்க முடியாமல் யானைக்கூட்டம் சிரமப்படுவதை கண்டு அந்த பகுதி மக்கள் பரிதவிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், அதனை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

-சி.ராஜேந்திரன். சுரேந்தர்.

Comments