பொள்ளாச்சியில் போலி அதிகாரி கைது..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓட்டலில் சோதனையில் ஈடுபட்ட போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி - உடுமலை ரோடு தேர்முட்டியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த ஓட்டலுக்கு டிப்-டாப்பாக ஆசாமி ஒருவர் திடீரென வந்தார். பின்னர் அங்கு இருந்த ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறியதோடு அதற்குரிய அடையாள அட்டையை காண்பித்து ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, ஓட்டல் ஊழியர்களை கடுமையாக திட்டியதோடு மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஓட்டல் மேலாளர் ஷேக் முகமது (வயது63) இதுகுறித்து பொள்ளாச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்புராஜூக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது அங்கு உணவு பாதுகாப்பு அதிகாரியாக ஆய்வு நடத்தியவர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது. இதையடுத்த அந்த ஆசாமியை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சின்ன நெகமம் என்.சந்திராபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (47) என்பதும், கோவையில் உள்ள மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், முருகேசன் வேறு இடங்களில் இதுபோன்று அதிகாரியாக நடித்து பணம் ஏதும் பறித்துள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 455 மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி ஆய்வு செய்ததில் போலி அதிகாரி ஒருவர் பிடிபட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்பொள்ளாச்சி.

Comments