பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பரோலில் வந்த மாணவனுக்கு கத்தியால் சரமாரியாக குத்து!! தப்பி ஓடிய கும்பலை பிடிக்க போலீஸார் வலை!!

   -MMH 

   பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பரோலில் வந்த மாணவனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிய  5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்!!

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன்,அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அண்மையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் அடைந்த மாணவர், இளைஞரை கத்தியால் குத்தினார். காயம் அடைந்த இளைஞர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவரை கைது செய்து கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், 20 நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 பொதுத் தேர்வுஎழுதுவதற்காக நீதிமன்ற அனுமதியோடு மாணவர் பரோலில் வெளியே வந்தார். நேற்று ராயப்பேட்டை வி.எம் தெருவில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு தனது தந்தையுடன் மாணவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மாணவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கும்பல், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, ரத்த காயத்துடன் கிடந்த மகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்அவுஸ் போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே தாக்குதலுக்கு ஆளான இளைஞரின் நண்பர்கள் பழிவாங்கும் நோக்கில் மாணவரை கத்தியால் குத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 5 பேர் கும்பலை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். 

-வேல்முருகன் சென்னை.

Comments