கோவையில் வாலிபர் கொலை : 30 நாட்களுக்கு பின் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் உடல் மீட்பு!!

   -MMH 

  கோவை தெப்பகுளத்தை சேர்ந்தவர் கோபால். இவருக்கு சொந்தமான வீடு ஆர்.எஸ்.புரம் லிங்கப்ப செட்டி வீதியில் உள்ளது. இந்த வீட்டில் உள்ள 3-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முஜீபூர் மாலிக் (வயது 24) உள்பட அவரது உறவினர்கள் 4 பேர் வாடகை அடிப்படையில் தங்கி இருந்தனர். அவர்கள் சேலை மற்றும்  ஜாக்கெட் ஆகியவற்றுக்கு எம்ராய்டிங் செய்யும் தொழில் செய்து வந்தனர். ஒரு மாதமாக வீட்டின் உரிமையாளர் கோபாலுக்கு முஜிபூர் மாலிக் வாடகை செலுத்த வில்லை. இதனையடுத்து அவரது செல்போனுக்கு கோபால் ெதாடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்க வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் வாடகை வாங்குவதற்காக அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் உள்ள சமையல் அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. சமையில் அறையில் இருந்து தூர் நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையல் அறையில் முஜிபூர் மாலிக் இறந்து கிடந்தார். அவர் இறந்து  30 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவருடன் தங்கி இருந்த 4 பேரும் மாயமாகி இருந்தனர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் கோபால் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த முஜிபூர் மாலிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்  அவருடன் தங்கி இருந்த உறவினர்களுக்கும் முஜிபூர் மாலிக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் இவரை கொலை செய்து விட்டு வீட்டை பூட்டி விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் முஜிபூர் மாலிக்குடன் தங்கி இருந்தவர்கள் யார்? அவர்கள் எங்கே தப்பிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வில்லை என்றும் பிரேத பரிசோதனை முடிந்ததும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப்கோவை.

Comments