புதிய மத்திய சிறை அமைக்க இடங்கள் ஆய்வு ! சிறைத்துறை அதிகாரிகள் தகவல்!!

   -MMH 

   கோவை மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறை, 1872ல் பிரிட்டீஷ் ஆட்சியில் 165 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இங்கு ஆண், பெண் கைதிகளுக்கான தனித்தனி அடைப்பிடங்கள், மருத்துவமனை, தொழிற்கூடம், கேன்டீன் ஆகியவை உள்ளன.

தற்போது தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2100 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் 45 ஏக்கர் ஏற்கனவே செம்மொழி பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 120 ஏக்கரில் சிறை செயல்படுகிறது.இந்த வளாகம் முழுவதையும் செம்மொழி பூங்கா மற்றும் அரசு திட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில், சிறையை புறநகர் பகுதிக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெள்ளலுார் குப்பைக்கிடங்கை ஒட்டி, நிலம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

மாநகரை ஒட்டியிருக்கும் பகுதி, அரசு மருத்துவமனைக்கு அரை மணி நேரத்துக்குள் சென்று விடலாம் என்ற சாதக அம்சங்கள் இருப்பதால், வெள்ளலுார் வளாகம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அங்கு சென்று குப்பைக்கிடங்கு ஒட்டியிருக்கும் இடத்தை பார்வையிட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள், அந்த இடம் வேண்டவே வேண்டாம் என்று நிராகரித்து விட்டனர்.

பாரதியார் பல்கலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் இன்னும் கணிசமான ஏக்கர் நிலம், பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதில் தங்களுக்கு ஒதுக்கினால் போதும் என்று சிறைத்துறையினர் கோரினர். அதை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள் மிகுந்த அந்த பகுதியில் சிறை வளாகம் அமைப்பது சரியானதாக இருக்காது என்று கூறி, அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. 

அடுத்த கட்டமாக, காரமடை பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு சிறை அமைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில், சிறைத்துறைக்கு தெரிவித்துள்ளனர். உயர் அதிகாரிகள், காரமடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஒப்புதல் அளித்தால், கோவை மத்திய சிறை வளாகம் அங்கு மாற்றப்படுவது உறுதியாகும் என்கின்றனர் சிறைத்துறையினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments