இரவில் பயங்கர திகில் சத்தத்துடன் பந்தயம் கட்டி பைக் ரேஸ்! அதிர்ச்சியில் உறையும் மற்ற வாகன ஓட்டிகள்!!

 

-MMH

  கோவை மாநகரில் மிக முக்கிய சாலையாக அவினாசி ரோடு உள்ளது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  ஆனால் கோவை- அவினாசி சாலையில் இரவு நேரங்களில் பயங்கர திகில் சத்தத்துடன் பைக்ரேஸ் நடக்கிறது. அப்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வேகத்தில் மிக அதிக வேகத்தில் செல்கிறார்கள்.  இது பற்றி விசாரித்த போது அவர்கள் பணம் பந்தயம் கட்டி பைக்ரேஸ் நடத்துவது தெரிய வந்தது. குறிப்பாக அவினாசி சாலையில் லட்சுமி மில் சந்திப்புக்கு அடுத்து தொடங்கி நீலாம்பூர் வரை இரவு 11 மணிக்கு மேல் பைக்ரேஸ் நடத்தப்படுகிறது.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தி முன்பக்கம் அல்லது பின்பக்க சக்கரத்தை மேலே தூக்கி சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.  இதனால் அந்த சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அந்த இளைஞர்கள், தங்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து திகிலுட்ட கூடிய சத்தம் வரும் வகையில் சைலன்சர்களை மாற்றி வடிவமைத்து உள்ளனர். இதனால் அவர்கள் இரவு நேரத்தில் மிகவேகமாக செல்லும் போது பயங்கர சத்தம் எழுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கலக்கம் அடைகின்றனர்.

220 சி.சி.யில் இருந்து 550 சி.சி.வரை உள்ள மோட்டார் சைக்கி ளில் இளைஞர்கள் அதிவேகமாக போட்டி போட்டு செல்கின்ற னர். இதற்காக அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பந்தய தொகை வைத்துக் கொண்டு செல்கிறார்கள். இதில், சிலர், வாகனத்தில் தோழிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை- அவினாசி ரோடு கொடிசியா சாலையில் இரவு நேரத்தில் கல்லூரி மாணவிகளும் பைக்ரேசில் ஈடுபடுவது காண்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது. 

இது குறித்து கோவை கன்சியூமர் வாய்ஸ் நா.லோகு கூறியதாவது;

கோவை -அவினாசி சாலையில் இரவில் மட்டுமல்ல பகலில் கூட பைக்ரேஸ் நடக்கிறது. சாலையில் குறுக்கும், நெடுக்குமாக  பயங்கர ஒலி எழுப்பிக் கொண்டு வேகமாக செல்கிறார்கள். 

இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் பைக்ரேஸ் நடத்துவது அதிகரித்து வருகிறது. பைக் ரேஸ் நடத்துவதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

இரவு 10 மணிக்கு மேல் கொடிசியா சாலையில் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் பைக்ரேஸ் நடத்துகிறார்கள். 

இதை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு பைக்ரேசில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பந்தயம் கட்டி போட்டி பைக்ரேஸ் செல்பவர்களால் மற்ற வாகன ஓட்டுனர்க ளுக்கு ஆபத்து உள்ளது. அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அது போல் அதிர்ச்சியூட்ட கூடிய பயங்கர சத்தம் வரும் வகையில் மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்களை மாற்றி வடிவமைத்து கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments