தரமற்ற முறையில் உணவுகளை கொடுக்கும் உணவகங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை!!

   -MMH 

   கெட்டுப்போன உணவு என்று தெரிந்தும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் ஓட்டல்காரர்களுக்கும், அவர்களது பெயர்களை மூடி மறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரு தரப்பினரும் குற்றவாளிகளே' என்கின்றனர் பொதுமக்கள்.கேரளாவில் 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் 'ஷவர்மா' விற்பனை செய்யும் உணவகங்களில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன கோழி இறைச்சி, கெட்டுப்போன 'ஷவர்மா' ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.கெட்டுப்போன உணவு விற்பனை செய்த கடைகள் எவை என்ற விவரம், வாடிக்கையாளர்கள் எவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் தவறு செய்த அதே உணவகத்துக்கு, மீண்டும் வாடிக்கையாளர்கள் செல்லும் நிலை இருக்கிறது. எனவே, கெட்டுப்போன உணவு விற்பனை செய்த உணவகங்களின் பெயரை, பகிரங்கமாக வெளியிட வேண்டும்.இது குறித்து, கோவை கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் நீதி மய்யம் மாநகர செயலாளர் தாஜூதீன் கூறுகையில், ''கெட்டுப்போன உணவு என்று தெரிந்தும் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உணவகத்தின் பெயரை பகிரங்கமாக அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்.

அதை அறிந்து, நல்ல உணவகத்தை தேடி தானாகவே மக்கள் சென்று விடுவர். ''மாறாக, பட்டியலே வெளியிடாமல் மூடி மறைத்தால், குற்றம் செய்யும் உணவக உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம்,'' என்றார்!                

கோவை கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மாநகர செயலாளர் தாஜூதீன் அளித்த மனு விவரம்:பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி உபயோகித்துதான் ஷவர்மா தயாரிக்கப்படுகிறது. இவற்றை அதிகம் உட்கொள்வது குழந்தைகளே. வாடிக்கையாளர்கள் உயிர் மீது அக்கறையின்றி, வியாபார நோக்கத்துடன், தங்கள் சுய லாபத்துக்காக கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்திய உணவகங்களின் பெயர்களை, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து, நல்ல தரமான உணவகங்களை நாடிச் செல்வர். மக்கள் நலன் கருதி, உணவு சம்பந்தப்பட்ட ஆய்வை அதிகாரிகள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கோரியுள்ளார்.         

நாம் என்ன தவறு செய்தாலும், அபராதம் மட்டும் தான், பெயர் வெளியே வராது' என்ற நம்பிக்கை காரணமாகவே, ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் தவறு செய்கின்றனர்.

கெட்டுப்போன உணவு, இறைச்சி, குழம்பு போன்றவற்றை சிறிதும் வீணாக்காமல், சூடாக்கி, மசாலா சேர்த்து அப்படியே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு காரணம், வியாபாரிகளுக்கு அஞ்சும் அதிகாரிகளே.'பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் பெற வேண்டும். அவப்பெயர் சம்பாதிக்கக்கூடாது' என்கிற தார்மீக அச்சம், ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் இருக்க வேண்டும். அந்த அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு. அதற்கு பதிலாக, 'நீங்கள் என்ன தவறு செய்தாலும், அபராதம் மட்டும்தான். விஷயம் வெளியே தெரியாது' என்கிற வகையில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

- சி.ராஜேந்திரன்.

Comments