கோவை மெட்ரோ இரயில்-சில சுவாரசிய தகவல்கள்..!!

-MMH

   கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது.
 தொடர்ந்து அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 கோவையில் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சிஸ்ட்ரா ரைட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப் பிறகு மெட்ரோ அமைப்பதற்கான அறிக்கையை தயாரித்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கி மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கோவையில் 42.9 சதவீதம் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். மேலும், 5.3 சதவீதம் பேர் கார்களையும், 5.3 சதவீதம் பேர் வாடகை வாகனங்களையும் பயன்படுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் 92 சதவீத வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு பைக் அல்லது ஸ்கூட்டர் வைத்துள்ளனர். 19 சதவீதத்தினர் சொந்தமாக கார்களை வைத்துள்ளனர்.


இதில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் விகிதம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட உள்ளது. இந்த மூன்று கட்டங்களும் சேர்த்து மொத்தம் 138.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்ட பணியாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரை 14.1 கி.மீ தூரத்திற்கும், வெள்ளலூரில் இருந்து அவினாசி சாலை, கோவை விமான நிலையம், பி.எஸ்.ஜி பவுண்டரி வரை 31.7 கி.மீ தூரத்திற்கும் என மொத்தம் 45.8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

இரண்டாம் கட்டமாக கோவை மத்திய ரயில் நிலையம் தொடங்கி திருச்சி சாலையில் உள்ள பாப்பம்பட்டி பிரிவு வரை 13 கி.மீ தூரத்திற்கும், அதே போல் ரயில் நிலையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் 18.1 கி.மீ தூரத்திற்கும் என மொத்தம் 31.1 கிலோ மீட்டர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மூன்றாம் கட்டமாக பல்வேறு இடங்களில் இந்த திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி. பவுண்டரி தொடங்கி கணியூர் வரை 9.2 கி.மீ தூரத்திற்கும், வலியம்பாளையம் பிரிவு தொடங்கி கணேசபுரம் வரை 10.5 கி.மீ தொலைவிற்கும், பாப்பம்பட்டி பிரிவு தொடங்கி காரணம்பேட்டை வரை 11.8 கி.மீ தூரத்திற்கும், பெரியநாயக்கன்பாளையம் முதல் பிளிச்சி வரை 7.8 கி.மீ தொலைவுக்கும், டவுன்ஹால் முதல் காருண்யா நகர் வரை 22.7 கி.மீ தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட பணிகளில் கோவையின் பெரும்பாலான இடங்கள் மெட்ரோ திட்டத்தின் கீழ் வந்துவிடும் என்றும், மூன்றாம் கட்டத்தில் மட்டும் மொத்தம் 62 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் வரும் 2025ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் மொத்தம் 3.71 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் தினமும் பயணம் செய்வார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தோராயமாக கூறப்பட்டுள்ளது.
இது அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2030ம் ஆண்டு 4.05 லட்சம் மக்களும், 2035ம் ஆண்டில் 5.31 லட்சம் மக்களும், 2045ம் ஆண்டில் 5.98 லட்சம் பேரும் மெட்ரோவில் பயணிப்பார்கள்." என்றனர்.

கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மெட்ரோ பாலங்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே உள்ள சாலை வழியாகத் தான் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சாலைகளின் அகலம், சாத்தியக்கூறுகள், நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டுமா என்று ஆய்வு நடைபெற்று வருகிறது.

சீக்கிரம் மெட்ரோ ரயில் வந்தால் நம்ம கோவையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என்பதிலும், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிப்பது தவிர்க்கப்படும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.

Comments