கோவை மாநகர காவல் எல்லையை விரிவாக்கம் செய்ய திட்டம்!!

   -MMH 

   கோவை மாநகர காவல் எல்லையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது! புதிதாக காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன!!

கோவை மாநகர காவல்துறை, ஐஜி அந்தஸ்திலான காவல் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது. 72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி, கடந்த 2011-ம் ஆண்டு 11 உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கத்துக்கு முன்பு வரை இருந்த பகுதிகள் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியிலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு பகுதியிலும் நீடிக்கின்றன. தற்போது, மாநகராட்சி பகுதி முழுவதையும், மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு வர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘மாநகரில் 15 சட்டம் ஒழங்கு, 15 விசாரணைப் பிரிவு, 8 போக்குவரத்து, 3 மகளிர் காவல் காவல் நிலையங்களும், 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகளும் உள்ளன. மாநகராட்சி பகுதியில் உள்ள வடவள்ளி, துடியலூர், காளப்பட்டி உள்ளிட்ட சில இடங்கள் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றன. இதனால் நிர்வாக ரீதியாக சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மக்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதிகள் மாநகர காவல்துறையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இவ்வாறு இணைக்கும்போது வடவள்ளி, துடியலூர், கோவில்பாளையம் ஆகிய காவல் நிலையங்களின் குறிப்பிட்ட பகுதிகள் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம், மாநகராட்சியின் பரப்புக்கு ஏற்ப மாநகர காவல்துறையின் எல்லைப் பரப்பும் இருக்கும்.

மேலும், கரும்புக்கடை, வெள்ளலூர், ஒண்டிப்புதூர், சிட்ரா, கணபதி ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்களும், தெற்கு உட்கோட்டத்தில் ஒரு மகளிர் காவல்நிலையமும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எல்லை விரிவாக்கம், கூடுதல் காவல் நிலையங்கள் ஏற்படுத்துதல், அதற்கேற்ப காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக, மாநகர காவல்துறையின் சார்பில் ஏற்கெனவே அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்வர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, மீண்டும் விரிவான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments