கறிக்கோழி பண்ணைகளை முறையாக பராமரிக்காவிட்டால், பண்ணை உரிமம் ரத்து! அதிகாரிகள் எச்சரிக்கை!!

 

-MMH

பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரி, செஞ்சேரிமலை, ஜல்லிபட்டி, வதம்பச்சேரி, சித்தநாயக்கன் பாளையம், திம்மநாயக்கன் பாளையம், அப்பநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

 இந்த பண்ணைகளில் வளர்க்க விடப்படும் கோழி குஞ்சுகள் 42 முதல் 45 நாட்களில் 2 கிலோ எடை கொண்ட கறிக்கோழிகளாக வளர்கிறது. கறிக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு பின்னர்  பண்ணைகளில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளா மாநிலத்திற்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

இந்தநிலையில் சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கோழிக்கழிவுகளில் இருந்து ஈக்கள் அதிகமாக உற்பத்தியாகி வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வட்டார சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பண்ணைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதாரஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறும்போது, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வாரம் ஒருமுறை கோழிக்கழிவுகளை பண்ணையில் இருந்து அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஈக்கள் தொல்லை இருக்கக்கூடாது. பண்ணையை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு உரிய முறையில் பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments