இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை - மின்பிரச்னை ஏற்பட்டால் சிறு, குறு தொழில்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய இணையமைச்சர்!!

    -MMH 

   இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை எனவும், மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டால் சிறு, குறு தொழில்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாட்கள் தேசிய கயிறு மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதே போல் கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த முறையில் தொழிலில் ஈடுபட்ட தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அசாம் மாநில தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்டோவாரி, கயிறு வாரிய தலைவர் குப்புராமு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிகாரிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும் போது தமிழகத்தில் இம்மாநாட்டை நடத்துவதற்கு நன்றி எனவும் விவசாயத்திற்கு பிறகு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சிறு, குறு தொழில்துறை எனவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் 37.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 கயிறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கடந்த நிதியாண்டில் 31 கயிறு நிறுவனங்களுக்கு 2.2 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கோவையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கயிறு வளர்ச்சி வணிக நிறுவனம் அமைக்கப்பட உள்ளது எனவும் மத்திய மாநில அரசுகள் கயிறு தொழிலுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழகத்தில் உள்ள 27 கயிறு கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் 186 இடங்களில் நாடு முழுவதும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் இதில் 60 சதவீதம் தமிழகத்தில் செயல்படுத்துகிறது எனவும் தெரிவித்தார். கொரோனா பேரிடர் நிதியாக மத்திய அரசு ஒதுக்கிய 5 லட்சம் கோடி ரூபாயில் 3 லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், நாட்டில் இதுவரை நிலக்கரி தட்டுப்பாடு இல்லை எனவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் இந்தியில் பேசினார். அப்போது, கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் தங்களுக்குள் பேசியபடியும், சில மொபைலை பார்த்தபடியும், சில தூங்கி வழிந்தபடியும் இருந்தனர். முன்னதாக நிகழ்ச்சி துவங்கும் போது, கணபதி துதி பாடப்பட்டு துவங்கியது. இதன் பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments