கோவையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் புதிய மேம்பாலங்கள்! இனியாவது வாகன ஓட்டிகளின் சிரமம் குறையுமா?

 

-MMH

   கோவையில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், தேசிய நெடுஞ்சாலையான கோவை திருச்சி சாலை (என்.எச்.181) முக்கி யமானதாகும். அரசு ஆஸ்பத்திரி சந்திப்பில் இருந்து சிங்காநல்லூர் வரை இந்த சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.232 கோடி மதிப்பில் 3.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

திருச்சி சாலையில் ராமநாதபுரம் அடுத்த பங்கு சந்தை அருகே தொடங்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதி சுங்கம் சந்திப்பை கடந்து அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழித்தடத்திலும், மற்றொரு பகுதி சுங்கம்- உக்கடம் பைபாஸ் சாலையிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 4 வழிப்பாதையாக, 17.20 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ரவுண்டானா சந்திப்பு அருகே மட்டும் 19.60 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது, இதற்காக மொத்தம் 111 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 25 மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,  திருச்சி சாலை மேம்பாலத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. சர்வீஸ் சாலை மட்டுமே அமைக்க வேண்டும். அதேபோல. மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இருந்து 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணியும் நிறைவடைந்துள்ளது. 2 மேம்பாலங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில்  திறக்கப்படும் என்றனர். வாகன ஓட்டிகளும் விரைவில் இந்த மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன். .

Comments