குறிப்பிட்ட காலத்திற்குள் உக்கடம் பாலம் வேலை முடியாதோ.? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நெடுஞ்சாலைத்துறை!!

 

-MMH

   கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி தொடர்ந்து தாமதமாகி வருவதால், ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, 2.436 கி.மீ., நீளத்துக்கு ரூ.498.44 கோடி மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டி வருகிறது. முதலில், உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மட்டும் கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தது. இதனால், ஆத்துப்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படாது என சுட்டிக்காட்டியதும், கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம் வரையிலும், சுங்கத்தில் இருந்து வாலாங்குளம் சாலையில் வருவோர் பாலத்தில் பயணிக்கும் வகையிலும் கூடுதல் நிதி ஒதுக்கி, பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.வேலைகள் 'ஸ்லோ'வரும், 2024, ஜூலை மாதத்துக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

ஆமை வேகத்தை விட படுமோசமாக வேலைகள் தொய்வாக நடந்து வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள்  பாலம் கட்டுமான பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தளவுக்கு வேலைகள் 'ஸ்லோ'வாக நடக்கின்றன.உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே இறங்கு தளம், மின் புதை வடம் அமைக்க குளக்கரையில் டவர் அமைக்கும் பணி, கரும்புக்கடையில் ஓடுதளம், ஆத்துப்பாலத்தில் வெள்ளலுார் ராஜவாய்க்கால் குறுக்கே ஓடுதளம், நஞ்சுண்டாபுரம் இட்டேரி சந்திப்பில் கான்கிரீட் பாலம் கட்டுதல் என ஒரே நேரத்தில், பல இடங்களில் பலவிதமாக வேலைகள் செய்யப்படுகின்றன.ஊர்ந்து செல்லும் வாகனங்கள் கரும்புக்கடை மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஓடுதளம் அமைக்கும் பணி மெதுவாக நடப்பதால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் ஒரு வழியாகி விடுகின்றனர். பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடாமல், இதே வழியில் அனுமதிப்பதால் வாகனங்கள் தேக்கம் அதிகமாக காரணமாகி விடுகிறது. கரும்புக்கடையில் இருந்து உக்கடம் சந்திப்பு வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதேபோல், டவுன்ஹால் நோக்கிச் செல்லும் வாகனங்கள், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து குளறுபடியால் ஒப்பணக்கார வீதியில் திணறித்திணறி செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதியில் பாலம் கட்டுமான பணி நடக்கும் பகுதிக்குள் தனியார் பஸ்கள் நுழைந்து செல்வதால், விபத்து அபாயம் இருக்கிறது.

இதேபோல், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வரும் பஸ்கள், குறிச்சி குளக்கரையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைத்த கான்கிரீட் சாலையில் பயணித்து பாலக்காடு ரோட்டை அடைந்து, புட்டுவிக்கி ரோடு வழியாக உக்கடத்துக்கு சுற்றிச் செல்கின்றன. குறிச்சி குளக்கரையில் மின் விளக்கு வசதியில்லை. இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் பஸ்கள், கட்டுப்பாட்டை இழந்தால் குளத்துக்குள் பாயக்கூடிய அபாயம் இருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன், அரசு துறை அதிகாரிகள் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலம் வேலையை வேகப்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உக்கடம் மேம்பாலம் பணி 'ஸ்லோ'வாக இருப்பது உண்மையே. விளக்கம் கேட்டு, ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். உக்கடத்தில் இறங்கு தளம் அமைக்க, 60 வீடுகளை காலி செய்ய வேண்டியிருக்கிறது. வளைவு பகுதி என்பதால் மெதுவாக செய்கின்றனர். ஒரு பகுதியில் முடித்து விட்டால், அடுத்தடுத்த துாண்களுக்கு இடையேயான வேலை வேகமெடுக்கும். கரும்புக்கடையில் வீடுகளை அகற்றி, நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. போலீஸ் சோதனை சாவடியை அகற்றி, அப்பகுதி அகலப்படுத்தப்படும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்..

Comments