"பேரறிவாளன் விடுதலை - இது மகிழ்ச்சியும் நம்பிக்கையும்மிக்க நாள்.."! தமிமுன் அன்சாரி!!

   -MMH 

   "கடந்த 31 ஆண்டு காலமாக கொடும் சிறைவாசத்தில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகரமான 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக அமைச்சரவை கூடி  161-வது பிரிவை பயன்படுத்தி இயற்றிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் அவர்கள் அலட்சியப்படுத்தியதும், ஒன்றிய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் பேரறிவாளன் தரப்பும், தமிழக அரசும் எடுத்த முன் முயற்சிகள் இன்று வெற்றிப் பெற்றிருக்கிறது.

மேலும் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று கூறியதுடன், அவர் முடிவெடுக்க தவறியதற்கு கண்டனத்தையும் தெரிவித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு இத்தீர்ப்பு வலு சேர்த்திருக்கிறது.

பல மாநிலங்களில் முதல்வர் மற்றும் ஆளுநர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் பனிப்போருக்கு இத்தீர்ப்பு  முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம் இந்தியா முழுக்க நீண்ட பல வருடங்களாக சிறையில் வாடும் பலரின் வாழ்வில் வெளிச்சம் பட்டிருக்கிறது.

இதற்காக சளையாமல் பாடுபட்ட வீரத்தாய் அற்புதம்மாள், நுட்பமுடன் பணியாற்றிய வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக நீதி சிந்தனையாளர்கள், தமிழின உணர்வாளர்கள் என அனைவரோடும் மனிதநேய ஜனநாயக கட்சி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறது.

எமது குடும்பத்தில் ஒருவருக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் திளைக்கிறோம். இதற்காக போராடியதில் பெரும் மனதிருப்தி அடைகிறோம். தமிழக அரசின் உறுதியான முன்னெடுப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துத் கொள்கிறோம்.

இதே வழக்கு தொடர்புடைய மற்றவர்கள் விடுதலை பெறவும், இதர வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசு சட்ட முயற்சிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்."

என்று  மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார்கள்!!

நாளைய வரலாறு  செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments