உக்கடம் மேம்பாலத்தின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை தரையில் பதிக்கும் பணி தொடக்கம்!

-MMH

 உக்கடம் மேம்பாலம் கட்டும் பணி ரூ.250 கோடி செலவில் நடை பெற்று வருகிறது. முதல்கட்ட மேம்பால பணிகள் முடிவடைந்து விட்டது. 2-வது கட்ட மேம்பால பணி கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம் வரை தற்போது நடைபெறுகிறது.  இது தவிர செல்வபுரம் பைபாஸ் சாலையில் இருந்து மேம்பாலத் தில் ஏறுவதற்கான தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 

உக்கடம் பஸ்நிலையம் அருகே மேம்பாலத்தின் குறுக்கே உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியை தரையில் பதித்தால் மட்டுமே மேம்பாலத்தை இணைக்கும் பணியை செய்ய முடியும்.  அந்த மின்கம்பியை அகற்றாததால் பாலஇணைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது.


உயர் அழுத்த மின்கம்பிகளை உக்கடம் பஸ்நிலைய பகுதியில் இருந்து பெரியகுளம்வரை தரையில் பதிப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் உயர்அழுத்த மின் கம்பிகளை தரையில் பதிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக கான்கிரீட்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர் அழுத்த கம்பிகளை தரையில் பதிக்கும் பணி ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும்.

அதன்பிறகு மேம்பால இணைப்பு பணிகள் நடைபெறும். மேம்பால பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர். மேம்பாலம் அமைப்பதற்காக கரும்புக்கடை அருகே தாங்கு தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.  அங்குள்ள பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  எனவே அங்கு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவைமாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments