சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி!!

   -MMH 

   மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

நடப்பு சீசனிலும் கேப்டனாகவே சிஎஸ்கே அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகி பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜாவில் தலைமையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து சரிவை சந்தித்தது. 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றது. 6 போட்டிகளில் தோல்வியை தழுவி 4 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் நீடித்தது. இந்த நிலையில் தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கேப்டன் பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்துள்ளார் ஜடேஜா. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரவீந்திர ஜடேஜா விளையாட்டில் அதிக கவனம் செலுத்த கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்து, கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு தோனிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட தோனி, அணியை வழிநடத்துவார். ஜடேஜா தனது விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேல்முருகன் சென்னை.

Comments