சென்னையில் எங்கே அமைகிறது இரண்டாவது விமான நிலையம்? 17ஆம் தேதி முக்கிய மீட்டிங்!

 -MMH 

சென்னை: சென்னையில் அமைய உள்ள இரண்டாவது சர்வதேச விமானம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய சர்வதேச விமானங்களில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் ஒன்றாகும். பல முக்கிய நகரங்களுக்கு மீனம்பாக்கம் ஏர்போர்டில் இருந்து நேரடியாக விமானங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் விமானத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதை மீனம்பாக்கம் ஏர்போர்டால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இதன் காரணமாகச் சென்னையில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. விமான நிலையம் கட்ட ஏதுவான இடத்தை தேடி, அதைக் கண்டறியும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை கொண்ட உயர்மட்டக் குழு டெல்லி செல்கிறது.

அவர்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். தலைநகர் சென்னையில் மொத்தம் நான்கு இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, இந்திய விமான நிலைய ஆணையம் சமீபத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (டிட்கோ) தனது பரிந்துரையை சமர்ப்பித்து இருந்தது. அதில் பன்னூர் மற்றும் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கலாம் எனக் கூறி இருந்தது.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சரை ஜூன் 17ஆம் தேதி சந்திக்க உள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதேபோல திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும்" என்றார்.


மேலும், விமான நிலையம் அமையும் இடம் இறுதி செய்யப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலின் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னூர் மற்றும் பரந்தூரில் என இரு இடங்களும் ஆப்ஷனில் உள்ளதாகவும் இரு இடங்களின் சாதக பாதகங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பரிந்துரை செய்யப்பட்டுள்ள இரு இடங்களிலும் OLS எனப்படும் Obstacle Limitation Surface Survey செய்யப்பட வேண்டும். இரு இடங்களிலும் சில சிக்கல் இருப்பதால் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, OLSஐ நடத்துவது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார். கட்டுமான பணிகளில் எந்தவொரு தாமதமும் ஏற்படவில்லை என்றால், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடத்தை இறுதி செய்வது, விரிவான திட்ட அறிக்கையை உருவாக்குவது, பல துறை அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல், கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்வது என பல்வேறு நிலைகள் இதில் இன்னும் உள்ளது. அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உடன் புதிய ஏர்போர்ட் ஏற்படுத்தப்படும். சில ஆண்டுகள் முன்பு வரை நாட்டின் மூன்றாவது முக்கிய ஏர்போர்ட்டாக சென்னை இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அந்த இடத்தை சென்னை இழந்தது. இந்த புதிய விமான நிலையம் மீண்டும் அந்த பெயரைப் பெற்றுத் தரும் என்றே நம்பப்படுகிறது!

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments