66 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்படும் கதவணையும், வாய்க்காலும்! நீர்வளத்துறை அதிகாரி தகவல்!

 

-MMH

மேட்டுப்பாளையம் அருகே, 66 ஆண்டுகளுக்குப் பின், கதவணையும், வாய்க்காலும் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.மேட்டுப்பாளையத்தில் கல்லாறு, நெல்லித்துறை ஆகிய இரு பகுதிகளில் உள்ள, விவசாய நிலங்களுக்கு ஆற்று வாய்க்கால் பாசன வசதி உள்ளது.கோத்தகிரி ஆறு, கல்லாறு ஆகிய இரு ஆறுகளின் தண்ணீரை, சம மட்ட வாய்க்கால் வாயிலாக, விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. பவானி ஆற்று தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த, 1955ம் ஆண்டு ஓ.வி.சி., (ஓரக்கரை வெங்கட்ராம செட்டியார்) என்ற பெயரில் வாய்க்கால் வெட்டப்பட்டது.இந்த தண்ணீர் தேக்கம்பட்டி ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. இதற்காக நெல்லித்துறை வனப்பகுதியில், பவானி ஆற்று தண்ணீரை தேக்கி வைக்க, கதவணை கட்டப்பட்டது. இதில் தேங்கி நிற்கும் தண்ணீர், வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வந்தது. 

காலப்போக்கில் இந்த வாய்க்காலை சீரமைக்காமலும், கதவணையை பராமரிக்காமலும் விட்டதால், வாய்க்கால்கள் மண் மூடியது. கடந்த, 66 ஆண்டுகளாக இந்த வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு, இந்த வாய்க்காலை சீரமைக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து தண்ணீரைத் தேக்கி வைக்கும், கதவணை புதிதாக கட்டும் பணிகளும், வாய்க்கால் சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரமேஷ் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் இருந்து, ஓ.வி.சி., வாய்க்கால், 6கி.மீ., அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 373 ஏக்கருக்கு பாசன வசதி கிடைத்தது.பவானி ஆற்றில் அமைந்துள்ள கதவணை பராமரிக்காததால் சிதிலமடைந்தது. கதவணையையும், வாய்க்காலையும் சீரமைக்க, தமிழக அரசு நபார்டு நிதியில், 6.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.பவானி ஆற்றில் வனப்பகுதி அருகே, இருந்த கதவணையை இடித்து விட்டு, 45 மீட்டர் அகலம், 2 மீட்டர் உயரத்தில், புதிதாக கதவணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. வாய்க்கால் தூர் எடுத்து சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதுவரை, 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் செய்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே வாய்க்காலில் தண்ணீர் விட, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு, உதவி பொறியாளர் கூறினார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments