தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் தமிழக ஆளுனர்..!

   -MMH 

   தமிழக ஆளுனர் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சனாதனம் குறித்து பேசினார். ஆனால் மாநிலத்தின் உயர்பதவி வகிக்கும் ஆளுனர், ஒரு மதம் சார்ந்து பேசக்கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பின்னர் மீண்டும் ஒரு விழாவில் சென்னையில் பேசிய ஆளுனர், சனாதனம் என்பது மதம் அல்ல என விளக்கம் அளித்தார். இதையடுத்து, தற்போது வேலூர் விழாவில் நதி, பூமி உள்ளிட்ட பஞ்ச பூதங்களை வணங்குவதே சனாதனம் என புது விளக்கத்தை அளித்துள்ளார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா நடத்தியது. இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி பங்கேற்றனர். விழாவை தொடங்கி வைத்து பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்; இது தான் சனாதனம். பூமியை வாழ்க்கைக்கான ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது அதை தெய்வம் போல வணங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் இனிவரும் 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் உலக சுற்றுச்சூழலில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதனால் நாம் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியம் என ஆளுனர் ரவி தெரிவித்தார்.

ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கும் முறை உள்ளது. சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக ஆளுனர் ரவி கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆர்.கே.பூபதி

Comments