விபரீதமாகும் விளையாட்டு! ஊக்க மருந்தால் சீர்கெடும் விளையாட்டுத்துறை!!

 

-MMH

வெற்றிக்காக விடா முயற்சியுடன், வியர்வை சிந்தி பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மத்தியில், ஊக்க மருந்தை நாடும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் கொடூரமானவை என்பதால், இது போன்ற ஊக்க மருந்துகளை தவிர்க்க, பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

சிறுவர்கள் வளரும் போது ஒழுக்கம், நல்லெண்ணம், கூட்டு முயற்சி, உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவையுடன் வளர வேண்டும் என்பதற்காக, பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டை கற்க அறிவுறுத்திய காலம் போய் விட்டது.இன்று விளையாட்டில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதித்து, அரசு மற்றும் பிற முன்னணி துறைகளில் வேலை வாங்கிவிட வேண்டும் என, பலர் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.இன்னும் சிலர், சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்து, அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று, போட்டிகளை அணுகுவதும் உண்டு. ஒரு சில நேரங்களில் கடுமையான முயற்சி வெற்றி தராமல் போகும் போது, வீரர்கள் இவ்வகையான குறுக்கு வழிகளில் செல்கின்றனர்.சமீபத்தில், கோவையில் நடந்த இரண்டு மாநில அளவிலான போட்டிகளில், பங்கேற்ற வீரர்களில் பலர், வெற்றிக்காக ஊக்க மருந்து செலுத்தி இருப்பதற்கு, நேரு ஸ்டேடியம் கழிவறைகளில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஊசி, சிரிஞ்ச் மற்றும் காலி மருந்து பாட்டில்களேசாட்சி.போட்டியில் கூடுதல் 'எனர்ஜியுடன்' செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், போட்டி ஆரம்பிக்கும் முன் இதை செலுத்திக்கொள்கின்றனர்.

பொதுவாக, வீரர்கள் ஊக்க மருந்து செலுத்தியுள்ளனரா என்பதை கண்டுபிடிக்க 'டோப் டெஸ்ட்' எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வகையான 'டோப் டெஸ்ட்' முறை தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிக செலவாகும் என்பதாலும், இதற்கான வசதிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது என்பதாலும், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் 'டோப் டெஸ்ட்' செய்யப்படுவதில்லை. இதனால்தான் மாநில அளவிலான போட்டிகளில், ஊக்க மருந்து செலுத்திக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. பயிற்சியின் போது பயன்படுத்த ஆரம்பிக்கும் வீரர்கள், விதிமுறைகளுக்கு எதிராக போட்டிகளிலும் பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் பிராங்க் பால் கூறுகையில், ''மாநில அளவிலான போட்டிகளில் டோப் டெஸ்ட் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், சில போட்டியாளர்கள், போட்டி துவங்கும் முன் ஊசி செலுத்தி கொள்கின்றனர். வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற நோக்கில், ஒரு சில பயிற்சியாளர்களே, இதை வீரர்களுக்கு அளிக்கின்றனர். இந்த ஊக்க மருந்து உடலுக்குள் சென்று ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து, விளையாட்டு வீரர்கள் அறிவதில்லை. தொடர்ந்து ஊக்க மருந்து செலுத்துவதால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்,'' என்றார்.விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் இதை உணர்ந்து ஊக்க மருந்து செலுத்தி வெல்லும் போக்கை தவிர்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்           

-சி .ராஜேந்திரன். 

Comments