திருநெல்வேலி சிறப்பு ரயில் கிணத்துக்கடவு வில் நின்று செல்லுமா? பொதுமக்கள் கோரிக்கை!!

 

-MMH

 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், கடையநல்லுாரில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்கள்:06029/06030), கடந்த மாதம் 22ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் வெள்ளிக் கிழமைகளில், இரவு, 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.இதேபோல், திருநெல்வேலியில் இருந்து, வியாழக்கிழமைகளில், இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 

மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்துார், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீலகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் வரும், 9ம் தேதி முதல் கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதி பயணியர் பயனடைய முடியும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த ரயில், கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்குவதில்லை. இதனால், தென்மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திருநெல்வேலி ரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க வேண்டுமென, ரயில் பயணியர் நலச்சங்கம், பொதுநல அமைப்புகள் சார்பில் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடையநல்லுாரில் நிறுத்தம் செய்யப்படும் என, அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், கிணத்துக்துக்கடவு மக்களின் கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments