கட்டிட வரைபட அனுமதிக்கு காலதாமதம்! பொறியாளர்கள் வேதனை!!

 

-MMH

கோவை மாநகராட்சியில், கட்டட வரைபட அனுமதி தொடர்பான கோப்புகள் இனி நகர பொறியாளர் வழியாக, துணை கமிஷனர் மற்றும் கமிஷனருக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.கோவை நகரில், 10 ஆயிரம் சதுரடிக்குள் குடியிருப்பு, 2,000 சதுரடிக்குள் வணிக உபயோக கட்டடம் கட்டுவதாக இருப்பின், மாநகராட்சியில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும்.

பதிவு பெற்ற பொறியாளர்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்தபின், புகைப்படத்துடன், கோப்பு வடிவில், நகரமைப்பு பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும். நகரமைப்பு அலுவலர், துணை கமிஷனர், கமிஷனர் அலுவலகத்துக்கு கோப்பு பயணமாகி, கையெழுத்தான பிறகு, வரைபட அனுமதி உத்தரவு வழங்கப்படும். தற்போது மற்ற மாநகராட்சிகளில் பின்பற்றுவதுபோல், tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தாலும், காகித வடிவிலும் கோப்பு சமர்ப்பிக்க, விண்ணப்பதாரர்கள் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில், குடியிருப்பு, தொழிற்சாலை, அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அனுமதி, 60 நாட்களுக்குள் ஒற்றை சாளர முறையில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், மாதக்கணக்கில் அலைந்தாலும் அனுமதி கிடைக்க தாமதமாவதாலும், விண்ணப்பத்தை நிராகரிப்பதாலும், ஆளுங்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'கட்டடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சியில் அப்ரூவல் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. விண்ணப்பங்களை உதவி நகரமைப்பு அலுவலர் நிராகரிக்கும்போது, தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. பதிவு பெற்ற பொறியாளர்கள் விண்ணப்பிக்கும் போதே, என்னென்ன ஆவணங்கள் தேவை என கேட்டுப் பெறலாம். அவ்வாறு செய்யாததால், ஒவ்வொரு மண்டலத்திலும், தலா, 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன' என்றனர்.

பதிவு பெற்ற பொறியாளர்களிடம் கேட்டபோது, 'மண்டல அலுவலகங்களில் உள்ள உதவி நகரமைப்பு அலுவலர்களே, கோப்புகளை கிடப்பில் போட்டு விடுகின்றனர். அரசு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தாலும், புதிது புதிதாக ஆவணங்கள் கேட்டு, திருப்பி அனுப்புகின்றனர். என்னென்ன ஆவணங்கள் தேவை என குறிப்பிட்டு, உடனுக்குடன் 'அப்ரூவல்' வழங்க, புதிய மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.   

இச்சூழலில், கட்டட வரைபட அனுமதி தொடர்பான கோப்புகளை, நகரமைப்பு பிரிவில் இருந்து நகர பொறியாளர் மூலமாகவே, துணை கமிஷனர் மற்றும் கமிஷனருக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments