பெரும் நெருக்கடியில் கிரில் தொழிலாளர்கள்! மூடுவிழா காணும் தொழிற்கூடங்கள்!!

-MMH

  கொரோனா சமயத்தில் பெரும் நெருக்கடிகளை சந்தித்த தொழில் துறையில், 'கிரில் பேப்ரிகேசன்' எனும் கிரில் தயாரிப்பும் ஒன்று. கோவை மாவட்டத்தில், 4,500க்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்களும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். பாதிப்புகளில் இருந்து மீள, மத்திய அரசு வங்கிக்கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்கியது. ஆனால், இவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காததால், சொந்தக்காலில் நிற்கும் பரிதாபம் ஏற்பட்டது. ஓரளவு மீண்டுவரும் சமயத்தில் இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, அடி மேல் அடி தந்தது. தற்போது, தொழில் நசிந்து மூடுவிழா கண்டுவருவதால், இலவச மின்சாரம், தொழிற்பேட்டை என பல்வேறு கோரிக்கைகளை, தமிழக முதல்வரிடம் கிரில் தயாரிப்பாளர்கள் முன்வைக்கின்றனர்..

கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் ரவி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் கோவையில் தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது, குறிப்பிட்ட சங்கங்கள் மட்டுமே கலந்து கொண்டன. எங்களை போன்ற கூலிக்கு வேலை செய்யும் தொழில் அமைப்புகள் பங்கேற்று, கோரிக்கைகளை முன்வைக்க முடியவில்லை.நாங்கள் ஜி.எஸ்.டி., வசூலிக்க முடியாமல், கூலிக்கு வேலை செய்து வருகிறோம். விசைத்தறி கூடங்களுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போல், 'கிரில் பேப்ரிகேஷன்' தொழிலுக்கும் குறைந்தபட்சம், 500 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், அதற்கு மேல் சலுகை கட்டணத்திலும் வழங்க வேண்டும்.

கிரில் தொழிலுக்கு தனி தொழிற்பேட்டைகள் அமைத்து தருவதுடன்,தனி நலவாரியமும் அமைத்து கொடுத்தால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோரும், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயன்பெறுவர்.கிரில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பிட்டர், வெல்டர் பாட திட்டங்களை தொடங்க வேண்டும்.தமிழக முதல்வர் எங்களது நீண்டகால கோரிக்கைளை நிறைவேற்றி, தொழிலை காக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்            

-சி. ராஜேந்திரன்.

Comments