விதிமுறைகளை மீறி "பம்பர்" பொறுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

-MMH

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், வாகனங்களில் அத்துமீறி 'பம்பர்' பொருத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், பெரும்பாலான கார்கள், மினி வேன், சுற்றுலா வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களில், விபத்தின் போது சேதத்தை தவிர்க்க 'பம்பர்' பொருத்துகின்றனர். ஆனால், 'பம்பர்' பொருத்தாத காரில் 'சீட் பெல்ட்' அணிந்து செல்லும் போது, விபத்தில் சிக்கினால், 'சென்சார்' உடனடியாக செயல்பட்டு, 'ஏர் பேக்' விரிவடைந்து, காரில் இருப்பவர்களை சூழ்ந்து உயிரை காக்கிறது.

ஆனால், 'பம்பர்' பொருத்திய கார், விபத்துக்குள்ளாகும் போது, அதில் ஏற்படும் அதிர்வுகளை பம்பர் தாங்கிக் கொள்வதால், 'சென்சார்' செயல்படாமல், 'ஏர் பேக்' விரிவடையாமல், உயிரிழப்பு விபத்தாகிறது.காரில் செல்பவர்கள் மற்றும் எதிரே மோதும் வாகனங்கள், ஆட்களின் பாதுகாப்பு கருதி, வாகனங்களில் 'பம்பர்' பொருத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.இதை அமல்படுத்த செப்., முதல் நவ., வரையில், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு செய்து, 'பம்பர்' பொருத்திய வாகனங்களுக்கு ஓரிரு நாட்கள் அபராதம் விதித்தனர்.   

அதன்பின், தற்போது கண்காணிப்பு மேற்கொள்ளாமல், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், 'பம்பர்' பொருத்தும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முக்கிய அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்களின் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் 'பம்பர்' பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்திலும் 'பம்பர்' பொருத்தப்பட்டுள்ளது.இதையெல்லாம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு, அத்துமீறுவோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், விபத்துகள் ஏற்படும் போது, உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments