கோவில்பட்டியில் சினிமாவை மிஞ்சிய சேஸிங்.. குற்றவாளிகள் அதிரடி கைது!!

      -MMH 

        தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் இளையரசநேந்தல் சாலை ரயில்வே சுரங்கம் பாலம் அருகே பாத்திரம் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் அங்கு பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்தும் வருகிறார்.

வழக்கம் போல நேற்று மதியம் தங்கம் அவரது கடையில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது மிடுக்கான ஆடை அணிந்து கொண்டு வந்த சிலர் தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.மேலும் அவர்கள் கையில் வாக்கி டாக்கி ஒன்றும் வைத்திருந்தனர்.

அவர்கள் தங்கத்திடம் திருட்டு பொருளை வாங்கியது தொடர்பாக ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் தங்கம் அவர்களிடம் தான் எந்தவித பொருளும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இருந்த போதிலும் அவரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று இனோவா காரில் ஏற்றி சென்றுள்ளனர்.

கார் கோவில்பட்டியை தாண்டி விருதுநகர் அருகே சென்றதும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் கைது செய்து அடைத்துவிடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தங்கம் மறுத்துள்ளார். பின்னர் 15 லட்சம், 10 லட்சம் என பேரம் பேசி கடைசியில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் விடுகிறோம் என்றதும் தங்கம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து கரூர் வரை சென்ற கார் மீண்டும் திரும்பி விருதுநகருக்கு வந்துள்ளது. தங்கம் தனது மகன் செந்திலுக்கு தகவல் தெரிவித்து 5 லட்ச ரூபாயை கொண்டு வரச் சொல்லியுள்ளார். செந்திலும் பணத்தினை விருதுநகருக்கு கொண்டு வந்துள்ளார். 2 மணி நேரத்திற்கு மேலாக பல இடங்களுக்கு வர சொல்லி அலைக்கழிப்பு செய்த அந்த கும்பல் இறுதியில் ஒரு தனியார் பள்ளி முன்பு பணத்தினை பெற்றுக்கொண்டு தங்கத்தினை அந்த கும்பல் விடுவித்துள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அங்கிருந்து வந்த தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் வைத்து , கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சிசிடிவி காட்சியில் உள்ள காரின் அடையாளத்தினை வைத்து சாத்தூர் சுங்கசாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த கார் கடந்து சென்றது தெரியவந்துள்ளது. இருப்பினும் காரில் இருந்த நம்பரும், சுங்கசாவடியில் பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கப்பட்ட நம்பரும் வெவ்வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் போலி நம்பர் பிளேட் வைத்து வந்தது தெரியவந்தது.

இதையெடுத்து பாஸ்டேக்கில் உள்ள வாகன எண்ணை வைத்து போலீசார் அந்த காரை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். அந்த கார் கரூர் அரவாக்குறிச்சி வேளஞ்செட்டியூரில் சுங்கசாவடி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டுள்ளது.

அந்த சுங்கசாவடி அருகே வரும் போது போலீசார் தடுக்க முயன்ற போது அந்த கார் தடுப்புகள் மீது மோதி விட்டு நிற்கமால் சென்றுள்ளது. போலீசாரும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். வெள்ளியணை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆட்டையாம்பரப்பு பகுதியில் போலீசார் டிராபிக் ஜாம் ஏற்படுத்தி அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

காரில் இருந்த டிரைவர் பெங்களுரைச் சேர்ந்த் பரன்கவுடா (29), தாஸ் ( 30), டேனியல் (48), பவுல் (33), பெரோஸ் கான் (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 லட்ச ரூபாய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலி வாக்கி டாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள டேனியல் என்பவர் தான் டி.எஸ்.பியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை கோவில்பட்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments