சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் வழியில் ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் இளைய மடாதிபதி பஞ்சலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார்!!

சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் வழியில் ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் இளைய மடாதிபதி பஞ்சலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பூதவுடல் ஆதீனம் வளாகத்திலேயே சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மறைந்து 8ஆம் நாளான இன்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒளி வழிபாடு நடத்தப்பட்டது. 

பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் மற்றும் காமாட்சிபுரி ஆதீன சீடர்கள், குருகுல மாணவர்கள் ஆகியோர் முன்னின்று, திருவிளக்கு பூஜை, திருவெல்வி முறை, வேள்வி நிறையவி, பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ஒளி வழிபாடு நடத்தினர். 

பின்னர் காமாட்சிபுரி இளைய ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர். பின்னர் பஞ்சலிங்க சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் விட்டுச் சென்ற ஆன்மீகம் மக்கள் பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்ய உள்ளேன். சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்னுள் இருந்து ஆதீனத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள செய்வார். அவரது வழியில் தொடர்ந்து இந்து மதத்துக்கும் சைவ நெறியின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments