திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பம்!!

திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மிகப்பெரிய சவால் இருப்பதாகவும் தற்போது கழிவுநீர், தொழிற்சாலைகள்,திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் தங்களிடம் தீர்வு  இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இதற்கான தொழில் நுட்பங்கள் டி ஆர் டி ஓ, சிஎஸ்ஐஆர் சிட்ரா போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதா கவும் அவை ஆற்றல் திறன் கொண்டவை என்றும் இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இதை குறைந்த செலவில் செயல்படுத்த முடியும் என்றும் ஒப்பிட முடியாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பை இது வழங்குகிறது என்றும் கூறினார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்றதாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு இதற்கான ஆய்வை முடித்து மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றதாகவும் ஆனால் மத்திய மாநில அரசுகள் இதனை செயல்படுத்த முன்வராத நிலையில் அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை தங்களது நாட்டில் செயல்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

எவ்வளவு டன் கழிவுகள் இருந்தாலும்  நீர் நிலம் மாசுபடாமல் அவற்றை அழிக்க முடியும் என்றும் இந்த தொழில் நுட்பத்தை நிறுவுவதற்கு மூன்று ஏக்கர் நிலம் மற்றும் பதினாறு கோடி ரூபாய் செலவழித்தால் மட்டும் போதுமானது எனவும் குப்பைகளை அழிக்கும் தங்களது தொழில் நுட்பத்திற்கு அங்கீகாரம் வழங்கினால் நீர் நிலம் மாசு அடையாமல் காப்பதே தங்களது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments